நீங்கள் எதற்கு அடிமை..? கண்டு பிடிக்க ஒரு ஸ்கேன்..!


'மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது!' போதைபற்றி கபீர் இயற்றிய வரிகள் இவை. Self medication' எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு மருந்து தேடிக்கொள்வதன் மூலம்தான் போதைக்கு அடிமையாதல் நிகழ்கிறது என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். அகராதிகளோ 'ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுவதுதான் போதை' என் கின்றன.

 

சமூகத்தின் எந்தத் தளத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும், எந்தப் பிரிவினைச் சேர்ந்த வராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போதைக்கு ஆட்படத்தான் செய்கிறார்கள். இங்கு 'போதை' என்பதை புகை, மது என்ற பழக்கத்தில் மட்டும் அடக்க வேண்டாம்.வீடியோ கேம்ஸ், செல்போன், இணையம், அதிகம் சாப்பி டும் பழக்கமான 'ஓவர் ஈட்டிங்', கட்டுப்பாடு இல்லாமல் செலவழிப்பது, வகை தொகை இல் லாமல் காணும் அனைத்து ஆண்கள்/பெண்களிடமும் 'நட்பு' பாராட்டி உறவு வளர்க்க முனைவது எனப் போதை தரும் விஷயங்கள், பட்டியலிட முடியாத அளவுக்கு மகா மெகா நீளமானது. அவற்றில் தொலைந்துபோகாமல் இளம் தலைமுறையினர் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்...


"போதைப் பழக்கம் என்றால், மது அருந்துவது மட்டும்தான் என்ற கருத்து தவறானது. பொருட்களுக்கு அடிமையாகும் 'substance addiction' மற்றும் இயல்பான பழக்கத்துக்கு எதிராகச் செயல்படும் பண்புகளுக்கு அடிமையாதல், அதாவது 'Behaviour addiction' என போதைக்கு அடிமையாவதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம்!" என்று முதல் வரியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் யாமினி கண்ணப்பன். "ஒயிட்னர் போன்ற சிந்தெட்டிக் ட்ரக்ஸ், கொக்கைன் போன்ற பார்ட்டி ட்ரக்ஸ், தூக்க மாத்திரைகள், இருமல் டானிக் போன்ற மருந்துப் பொருட்கள் என கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப, போதையின் வடிவம் மாறி வருகிறது. இந்தப் பொருட்கள் ஒருவிதத்தில் 'பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர்'களாக இருந்து, ஒரு மயக்கத்தை அளிக்கும். மேலும், தேர்வு சமயங்களில் வெகுநேரம் விழித்து இருந்து படிப்பது, ஷிப்ட்களில் வேலை செய்வது போன்ற மன அழுத்தம் தரும் விஷயங்களுக்காக இதுபோன்ற வடி கால்களை நாடுகிறார்கள். சமீபத்தியக்கணக்கு எடுப்பு, 17 வயதில் இருந்தே இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள் என்கிறது. அதாவது, கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே, போதை தரும் விஷயங்கள் அறிமுகமாகி விடுகின்றன.


பண்பியல் சார்ந்த அடிக்ஷன்களை எடுத்துக்கொண்டால், 'withdrawal symptoms இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதாவது, இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஏதோ ஒரு கார ணத்தால் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 'மீண்டும் எப்போது இணையத்தில் இணைவோம்' என்று வேறு வேலைகளை மறந்து, அதிலேயே அவர்களின் கவனம் இருக்கும். நிஜ வாழ்க்கையில் சாதிக்க முடியாத சில விஷயங்களை விர்ச்சுவல் உலகத்தில் சாதிக்க முடியும் என்று நினைப் பதால்... இணையம், சமூக வலைதளங்கள், கேமிங் சமாசாரங்கள் ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இன்று சுமார் 90 சதவிகித மக்களுக்கு செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல உணர்கிறார்கள். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது, சிக்னல் பிரச்னையால் அது டெலிவரி ஆகவில்லை என்றால், உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு மயக்கத்துக்கு ஆளாகிறார்கள். எப்படி சூதாட்டத்தில் எவ்வளவு இழந்தாலும் ஒரு முறை வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் விளையாடுவார்களோ, அதுபோலவே செல்போனைக் கையில் எடுத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இந்தக் கருவி என் வாழ்க்கையை நல்லதாக மாற்றி இருக்கிறது என்பதைவிட, என் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!" என்கிறார் யாமினி.


"கவலை மறந்து, பொய்யான சந்தோஷத்தில் மிதக்கப் பல போதை விஷயங்கள் இருக்கின்றன. சந்தோஷம் நம் வாழ்க்கையின் ஓர் அம்சம். அதை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். ஆனால், அதைச் சில மணி நேரங்களில் அனுபவித்து முடித்துவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. அதற்கு ஒரு பாதை இந்த போதை!" என வாழ்வியல் உண்மையோடு போதையின் இன்னொரு பக்கம் சுட்டுகிறார் சென்னை, டி.டி.கே. போதை மறுவாழ்வு மையத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.
"இளைஞர்கள் மதுவைத் தேடி ஓடுகிறார்கள் என் றால், அதை வீதிக்கு வீதி சுலபமாகக் கிடைக்கும்படி நாம் செய்துவிட்டோம். ஐ.டி. இளைஞர்கள் பலர் மன அழுத்தம் குறைய போதையைத் தேடுகின்றனர் என்பது தவறான கருத்து. ஐ.டி. இளைஞர்கள் என்று இல்லை; தேவைக்கு மேல் அதிக பணம் வைத்திருப்பவர்கள் அனைவருமே 'instant pleasure' என்பதை எதிர் பார்க்கிறார்கள். 20 வயதில் பீர் மட்டும் சாப்பிட்டேன் என்பார். ஆறு மாதம் கழித்து, ஒரு பெக் விஸ்கி மட்டும் என்பார். அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு, மூன்று என ரவுண்ட்கள் அதிகரிக்கும். இறுதியில், மருத்துவர் துணைகொண்டு மீட்கும் அளவுக்குச் சென்றுவிடுவார். இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு தவறான சிந்தனை, 'நாம நினைக்கிறபோது வேண்டாம்னு நிறுத்திடலாம்' என்பது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நிறுத்த முடியாது.


"எந்த ஒரு செயலுக்கு ஒருவர் முழுவதுமாகத் தன்னை அடிமையாக்கிக்கொள்கிறாரோ, அது எல்லாமே அவர்களுக்கு ஏற்படக்கூடிய போதைதான்!" என்று தொடங்குகிறார் மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர் ஜான்சி சங்கர். "போதை மருந்துகளை எப்படிப் பயன்படுத்தணும், எங்கெங்கே, என்னவிதமான போதைப் பொருட்கள் கிடைக்கும் போன்ற விஷயங்களை சினிமாவிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மாணவர்களுக்கு 'நாமும் அதைச் செய்து பார்த்தால் என்ன?' என்கிற அடிப்படை ஆசை மனதில் ஏற்படுகிறது.


இந்தப் பிரச்னைகள் மேலும் அதிகம் ஆகா மல் இருப்பதற்கு ஒரு வழி கவுன்சிலிங். இன்று, போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பு உணர்ச்சி மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இப்போது எல்லாம் கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். போதை மருந்துத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே ஈடுபடுத்தி, அவர்கள் மூலமா கவே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான், இதை ஓரளவாவது தடுக்க முடியும்.


போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை. யோகா, தியானம் போன்ற மனநலப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் நல்ல புத்தகங்கள், ஆரோக்கியமான நட்பு வட்டம், பெற்றோர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் ஆகியவையும் இருந்தால், போதையின் பிடியில் இளைய சமுதாயம் எப்படிச் சிக்கும்?" என்று கேள்வியுடன் முடிக்கிறார் ஜான்சி.


'யாருக்குத்தான் துன்பம் இல்லை இந்த உலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை!' என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவில் வைத்திருங்கள் தோழர்களே. 'அவன் செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன்!' என்று வழி தவறாதீர்கள். முடிந்தால் அவரைத் திருத்துங்கள். நீங்களும் சகதியில் குதிக்க வேண்டாம். போதை தவிர்த்தால், சீராகும் உங்கள் வெற்றிப் பாதை!

 

நன்றி - ஆனந்த விகடன்

{ 0 comments ... read them below or add one }

Post a Comment