புலிகள் மீது கடைசி கட்ட தாக்குதல் நடந்தது எப்படி?


"தமிழீழ அழிப்பு கொலைக் களத்தின் இறுதிக்கட்டம் பீரங்கி தாக்குதலோடு தொடங்கிவிட்டது; இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே இலங்கை ராணுவத்திற்கு இரையாகிவிடுவர்' என, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து, புதினம் செய்தியாளர் செய்மதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளம் புதினம். இந்த இணைய தளத்திற்கு நேற்று காலை, முள்ளிவாய்க்கால் கிராமத்திலிருந்து, அதன் செய்தியாளர் செய்மதி தொலைபேசியில் கூறியதாவது:

தமிழீழ அழிப்பு போர், இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது. பீரங்கிக் குண்டுகள் நான்கு பக்கத்திலிருந்தும் வந்து எங்கள் மீது விழுந்து கொண்டிருக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி குண்டுகள் எல்லாப் பக்கத்திலிருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இப்பகுதியில் இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு எதிர்த்தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், இலங்கை ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களை கொண்டு, மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.



கடந்த நான்கு நாட்களில் மட்டும் நான்காயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களே உள்ளன. இறந்தவர்களின் உடல்கள் அகற்றப்படாததால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே இலங்கை ராணுவத்திற்கு இரையாகிவிடுவர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தங்களை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல், காயமடைந்து, சிகிச்சைக்கு வழியில்லாமல் இருக்கும் போராளிகள் தங்களுக்கு "சயனைடு' கொடுக்குமாறு கதறுகின்றனர்.



பதுங்கு குழிகளுக்குள் இருந்த போதே கொல்லப்பட்ட மக்களின் சடலங்களுக்கு மேலேயே, உயிரோடு இருப்பவர்கள் பாதுகாப்புக்காக பதுங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நடக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகிறோம் என விடுதலைப்புலிகள் சொல்லிவிட்ட பின், யாராவது தம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் ஏங்கித் தவிக்கும் போது, மனித உயிர்களைக் காக்க இந்த உலகம் ஏன் எதையும் செய்யாதிருக்கிறது? இதுவே நான் செய்யும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும்; இனி என்ன நடக்குமோ தெரியாது, இதுவே எனது இறுதி செய்திக்குறிப்பு. என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுவே கடைசியாகவும் இருக்கலாம். இவ்வாறு புதினம் செய்தியாளர் செய்மதி கூறினார்.

{ 0 comments ... read them below or add one }

Post a Comment