
இலங்கையில், கடந்த 16ம் தேதி புலிகளின் கைவசம் இருந்த கடைசி கடற்கரைப் பகுதியையும் ராணுவம் கைப்பற்றியது. இதனால், இங்குப் பதுங்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் தலைவர்கள் தப்பிச்செல்ல வழி இல்லாமல் போனது. நேற்று முன்தினம் ஜோர்டானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, "சண்டையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்; சண்டை முடிவுக்கு வந்துவிட்டது' என அறிவித்தார். இதை புலிகளும் ஒப்புக் கொண்டனர். புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த எஞ்சிய 50 ஆயிரம் அப்பாவி தமிழர்களும் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் சுட்டுக்கொலை: நேற்று அதிகாலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான பகுதியில் இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தியது. இந்தச் சண்டையில் புலிகளின் முக்கியத் தளபதிகள், நடேசன், புலித்தேவன், இளங்கோ, ரமேஷ், சுந்தரம் மற்றும் கபில் அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. பிரபாகரனின் மகனும், புலிகளின் வான்படைத் தலைவருமான சார்லஸ் அந்தோணியும் கொல்லப்பட்டதாகவும், அவரது சடலத்தைக் கைப்பற்றியதாகவும் ராணுவம் அறிவித்தது. இந்தத் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இலங்கை அரசு "டிவி'யில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாவது: இன்று(நேற்று) அதிகாலை புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தினர். கடும் சண்டைக்கு இடையே புலித்தலைவர் பிரபாகரன், அங்கு நின்றிருந்த சிறிய வேன் ஒன்றில் ஏறி, சண்டை நடக்கும் பகுதியிலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் அங்கிருந்தும் வேகமாகக் கிளம்பியது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், பிரபாகரன் கொல்லப்பட்டார். அவருடன் தப்பிச் செல்ல முயன்ற புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு, "டிவி'யில் தெரிவிக்கப்பட்டது.
பிரபாகரன் கொல்லப்பட்டதை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கராவும் உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது:
புலிகள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்டுள்ளோம். பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. சண்டையில் பிரபாகரனுடன் சேர்த்து 250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. உளவுப்பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவ்வாறு உதய நானயக்கரா கூறினார்.
பலியான பிரபாகரனின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாகவும், அவர் தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தில் ராக்கெட்கள் இருந்ததால், அது வெடித்துச் சிதறியதன் காரணமாக தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்பு நகரில் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் இறங்கினர்.
"விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் மற்ற மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டதை அடுத்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது' என, இலங்கை அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி குறித்து அதிபர் ராஜபக்ஷே, இன்று இலங்கை பார்லிமென்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் விக்ரமசிங்கே பாராட்டு தெரிவித்துள்ளார். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை இந்திய அரசின் வெளியுறவுத் துறையும் உறுதி செய்தது.
இறந்தது யார்? யார்?
இலங்கை ராணுவத்துடனான சண்டையில் நேற்று பலியான விடுதலை புலி அமைப்பின் முக்கிய தலைவர்கள் பற்றிய விவரம்:
1.பிரபாகரன் (விடுதலை புலிகள் தலைவர்)
2. நடேசன்......(அரசியல் பிரிவு தலைவர்)
3. பொட்டு அம்மான்(உளவு பிரிவு தலைவர்)
4.சூசை .......(கடற்பிரிவு தலைவர்)
5. புலிதேவன் (அமைதி செயலக தலைவர்)
6. ரமேஷ்..... (தற்கொலை படை தலைவர்)
7. சார்லஸ் அந்தோணி(வான்படை மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர்)
8. இளங்கோ.......(போலீஸ் பிரிவு தலைவர்)
9. சுந்தரம்......(மூத்த தலைவர்)
10. கபில் அம்மான் (மூத்த தலைவர்)
{ 0 comments ... read them below or add one }
Post a Comment