ஜெட் விமானங்கள் பறக்கும்போது அதன் பின்னே வெண்ணிறக் கோடு தெரியும். நீங்கள் இதைப் பலமுறை பார்த்திருக்கலாம். இது ஜெட் எஞ்சினிலிருந்து வெளியேற்றப்படுகிற புகையென்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.
ஜெட் விமானம் வரைகிற அந்தக் கோடு, புகை அல்ல. ஜெட் எஞ்சினின் உள்ளே எரிபொருள் எரியும்போது, எரிபொருளில் அடங்கியிருக்கிற ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து நீராவியாக உருவமடைகின்றன. இந்த நீராவி வெளியேற்றப்படும்போது, வெண்ணிறக் கோட்டின் வடிவத்தில் மேகங்கள் உருவாகின்றன. இதுதான் நாம் காணும் வெண்ணிறக் கோடு.
வாயு வறண்டிருந்தால், இந்த "நீராவிக் கோட்டின்' நுட்ப நீர்த்துளிகள் அதில் கரைந்து சட்டென்று மறைந்துவிடுகின்றன. மாறாக, வாயு ஈரமுள்ளதாக இருந்தால், அந்தக் "கோடு' சற்று நேரம் நிலைத்திருப்பதை நாம் காண முடியும்.விமானத்திற்குச் சற்று பின்னால்தான் இந்தக் கோடுகள் ஆரம்பிக்கின்றன என்று, கூர்ந்து பார்த்தால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இதற்குக் காரணம், எஞ்சினிலிருந்து வெளியே வருகிற சூடான நீராவி குளிர்ச்சியடைவதற்குச் சற்று நேரமாகிறது என்பதுதான்.
ஜெட் விமானங்களைக் கொண்டு மக்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்தும்போது, இந்த வெள்ளைக் கோடுகளைப் பல நிறங்களில் வரும்படிச் செய்கிறார்கள்.
{ 0 comments ... read them below or add one }
Post a Comment