இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் பலியான விடுதலைப் புலித்தலைவர் பிரபாகரனின் உடல், தலையில் குண்டுக் காயத்துடன், நந்திகடல் நீர் ஏரிப் பகுதியில் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக பிரபாகரன் மரணம் குறித்து எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மிக குறுகிய நிலப்பரப்புக்குள் பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் முக்கியத் தளபதிகள் நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்தச் சண்டையில் புலித்தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் மற்றும் முக்கியத் தளபதிகள் புலித்தேவன், இளங்கோ ஆகியோர் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.
ராணுவத்தின் முற்றுகையிலிருந்து வேன் மூலமாகத் தப்பிச்செல்ல முயன்ற புலித்தலைவர் பிரபாகரன் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் பிரபாகரனுடன் தப்ப முயன்ற புலிகளின் கடற்பிரிவுத் தலைவர் சூசை, உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரும் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்தது. பிரபாகரன் தப்பிச்செல்ல முயன்ற வாகனத்தில் ராக்கெட்டுகள் இருந்ததால், தாக்குதலின் போது அவை வெடித்துச் சிதறியதன் காரணமாக பிரபாகரனின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
வதந்தி: இதற்கிடையே, புலிகள் ஆதரவு இணையதளத்தில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால், இலங்கையில் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளிலும் பரபரப்பு ஏற்பட்டது. பிரபாகரன் மரணம் குறித்துப் பல்வேறு வதந்திகள் வெளியாகின. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அரசு "டிவி'யில் நேற்று காலை ராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்தார். இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கராவும் உறுதிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது: இன்று (நேற்று) காலை நந்திகடல் நீர் ஏரிப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் காணும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. புலிகளின் சீருடை அணிந்த நிலையில், தலையில் குண்டுக் காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டிப்பாக அது பிரபாகரனின் உடல் தான்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் உட்பட ஏராளமானேர் பலியாவதற்குக் காரணமாக இருந்தவர் பிரபாகரன். புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மக்களுடன் ஒன்றாகக் கலந்திருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களைக் கண்டறிவோம். இவ்வாறு உதய நானயக்கரா கூறினார்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், பிரபாகரனின் உடலை ராணுவ வீரர்கள் சூழ்ந்திருப்பது போன்ற புகைப்படமும், வீடியோ காட்சிகளும் இலங்கை "டிவி'யில் ஒளிபரப்பானது. அந்த உடல் பிரபாகரனுடையது தான் என்பது மரபணுச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வளவு குறுகிய காலத்தில் சோதனை நடந்தது எப்படி என்ற விளக்கம் தரப்படவில்லை.
"டிவி' காட்சிகள்: தண்ணீர் சூழ்ந்த பகுதியில் நிலத்தில் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டுள்ளது. அதைச் சுற்றி இலங்கை ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். பிரபாகரன் புலிகளின் சீருடையை அணிந்துள்ளார். அவரது கண்கள் மற்றும் வாய் திறந்த நிலையில் உள்ளன. தலையின் மேல் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் குண்டுக் காயங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. குறிப்பாக, இடதுபக்க கண்ணிமைக்கு மேல் உள்ள பகுதிகள் சிதைந்திருக்கின்றன. பிரபாகரனை நன்றாக அடையாளம் காணும் வகையில் அவரது தலையை ராணுவ வீரர்கள் சிலர் தூக்கிக் காண்பிக்கின்றனர்.
பிரபாகரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருப்பதைத் தெரிவிக்கும் அடையாள அட்டையையும் ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். அதில், பிரபாகரனின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. புலிகள் அமைப்பில் அவர் தலைமைப் பொறுப்பைக் குறிக்கும் வகையில் 0.01 என்ற எண்ணும் அந்த அடையாள அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாயின.
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரது மரணம் தொடர்பாக கடந்த சில தினங்களாக நிலவி வந்த சந்தேகங்கள் தீர்ந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்தச் சண்டை குறித்த விசாரணை ஏதும் இருக்காது என்பதை இலங்கை அரசு தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்து நடத்திய போர் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தது. மேலும், தமிழர்களுக்குச் சமஉரிமை தர முயற்சிகள் எடுக்கப்படும் என்று, இலங்கை பார்லிமென்டில் அதிபர் ராஜபக்ஷே நேற்று அறிவித்தார்.
{ 0 comments ... read them below or add one }
Post a Comment